உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிலத்தடி நீர் குறைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு :மணல் சுரண்டல் எதிரொலி

நிலத்தடி நீர் குறைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு :மணல் சுரண்டல் எதிரொலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நீரேற்று நிலையத்தில் நிலத்தடி நீர் குறைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகருக்கு தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் எல்லிஸ் அணைக்கட்டு அருகே பம்ப் அவுஸ் அமைத்து தண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது. 50 எச்.பி., ராட்சத மோட்டார் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளை நடந்து வருகிறது. தற்போது நீரேற்று நிலையத்தில் திடீரென நீர் மட்டம் குறைந்துள்ளதால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரேற்று நிலையத்தில் 30 அடி உயரமுள்ள கிணற்றில், ஆற்றின் மணல் மட்டம் வரை தண்ணீர் தேங்கியிருப்பது வழக்கம். கோடை காலத்தில் மட்டும் 20 அடி அளவில் தண்ணீர் குறைந்தும், அதன் பின் வழக்கம் போல் தண்ணீர் மட்டம் உயர்ந்து வந்தது. வழக்கத்திற்கு மாறாக தற்போது கடந்த இரண்டு மாதங்களாக கிணற்றில் 5 அடி அளவில் மட்டுமே தண்ணீர் இருந்தது. கடந்த சில தினங்களாக கிணற்றில் முற்றிலும் நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வினியோகம் நடந்து வருகிறது. இதில் இடையே ஏற்படும் இழப்புகள் போக 15 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே விழுப்புரம் நகருக்கு சப்ளை செய்யப்படுகிறது. நீரேற்று நிலையம் அருகே அளவிற்கு அதிகமான மணல் கொள்ளை நடப்பதால் இந்த நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் முற்றிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்