| ADDED : ஆக 11, 2011 11:13 PM
திருக்கோவிலூர் : தமிழக முதல்வரின் உடனடி பட்டா மாற்ற அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராம பகுதியில் நிலத்தை வாங்கும் விவசாயிகள் பத்திரபதிவு செய்துவிட்டால் வேலை அத்துடன் முடிந்தது என இருந்து விடுகின்றனர். வருவாய்த்துறை ஆவணத்தில் மாற்றம் செய்வது கிடையாது. இதனால் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. விவரம் தெரிந்த விவசாயிகள் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பம் செய்து தாலுகா அலுவலகத்திற்கு அலையாய் அலைந்து திரிந்ததுதான் மிச்சம். நேரடியாக பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களின் நிலை இது. மேலும் உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் கோரும் விவசாயிகளின் நிலை இதைவிட கொடுமை. ஆண்டுகணக்கில் அலைகழிப்பதுடன் பல ஆயிரங்கள் இதற்காக கவனிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் வருவாய்த்துறை ஆவணங்களில் உண்மையான நிலவரங்கள் தெரியாமல் போவதுடன் நில விற்பனை, வங்கிக்கடன் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் ஆட்படும்போது மிகுந்த அவதிப்பட்டனர்.
விவசாயிகளின் மிகப்பெரிய குறையாக இருக்கும் இந்த பட்டா மாற்றத்தை தமிழக முதல்வர் ஜெ., எளிமையாக்கி உத்தரவிட்டுள்ளார். இதன்படி பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவு செய்து பட்டா கேட்பவர்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மனுக்களை கொடுக்கலாம். கிராமத்திற்கு பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலராக இருந்தால் செவ்வாய்க் கிழமை மனு அளிக்க வேண்டும். இதற்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். மனுதாரர்கள் தங்கள் மனுவுடன் கிரய ஆவணம், மூல ஆவணம், மனை பிரிவுகளுக்கான ஆவணம் ஜெராக்ஸ் இணைத்து வழங்க வேண்டும். பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தால் மனு அளித்த இரண்டாவது வெள்ளிக்கிழமை தாலுகா அலுவலகத்தில் உரிய உண்மை ஆவணங்களுடன் ஆஜரானால் உடனடியாக பட்டா மற்றுதல் உத்தரவு சிட்டா நகல் வழங்கப்படும். உட்பிரிவு கோரி பட்டா கேட்டிருந்தால் மனு அளித்த நாளில் இருந்து நான்காவது வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும். புலப்பட நகல், சிட்டா நகல்களை பெற்றுக் கொள்ளலாம். அப்பொழுது உட்பிரிவு கட்டணம் செலுத்தினால் போதும். இத்திட்டத்தின்படி உட்பிரிவு இல்லாத இனங்கள் 15 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு இனங்கள் 30 நாட்களுக்குள்ளும் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ., வரலட்சுமி தெரிவித்தார். விவசாயிகளுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.