உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் நலனில் பொன்முடிக்கு அக்கறை இல்லை

மக்கள் நலனில் பொன்முடிக்கு அக்கறை இல்லை

விழுப்புரம்:மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருந்ததால் விழுப்புரத்தில் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டது என அமைச்சர் சண்முகம் பேசினார்.விழுப்புரத்தில் மீண்டும் அரசு மருத்துவமனை துவக்கப்பட்டது. இதனை துவக்கி வைத்து அமைச்சர் சண்முகம் பேசியதாவது:இந்த மருத்துவமனை புதிதாக திறக்கவில்லை. பல ஆண்டுகளாக நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள மக்களுக்கு சிறப்பான சேவை அளித்தது. கடந்த ஆட்சியில் முண்டியம்பாக்கத்திற்கு மாற்றி விட்டனர்.இதே இடத்தில் மருத்துவமனை கோரி அ.தி.மு.க.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். விதிமுறை தெரியாமல் அ.தி. மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பொன்முடி கூறினார்.மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் வேண்டும். அந்த எண்ணம் பொன்முடிக்கு சிறிதும் கிடையாது.கடந்த 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் விழுப்புரம் நகராட்சி பிரசவ விடுதியை கூட மாற்ற கூறினார். போராட்டம் நடத்தியதும் நிறுத்தினார்.வசதி உள்ளவர்கள் மருத்துவமனை நடத்த இங்கு அரசு மருத்துவமனை கொண்டுவர தயங்கினார். மக்கள் நலனில் பொன்முடிக்கு அக்கறை இல்லை. அதனால் தான் இங்கிருந்த மருத்துவமனையை அங்கு கொண்டு சென்றார்.மீண்டும் இங்கு மருத்துவமனை கொண்டு வருவோம் என முதல்வர் ஜெ., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும் என கருதப்பட்டது. கடந்த 12ம் தேதி சட்ட சபையில் மருத்துவ துறை மானிய கோரிக்கையில் விழுப்புரம் மருத்துவமனை அமையுமென முதல்வர் அறிவித்தார்.தற்போது 23 டாக்டர்கள், 25 நர்சுகள் உட்பட 112 பேர் பணி புரிகின்றனர். ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்றதை விட முதல்வர் அறிவித்த தொட்டில் குழந்தை திட்டத்தை மாவட்டத்தில் துவக்கி, முதல் குழந்தையை ஒப்படைப்பதில் மகிழ்கிறேன்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.வைப்பு நிதி: விழாவின்போது முதல் தொட்டில் குழந்தைக்கு அ.தி.மு.க., சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி அளிப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி