ஒன்றியம் பிரித்தால் பொறுப்பு கிடைக்குமா? ; அ.தி.மு.க., ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு
வி க்கிரவாண்டி தொகுதி சில ஆண்டுகளாகவே இடைத்தேர்தல், த.வெ.க., மாநாடு போன்ற நிகழ்வுகளால் பிரபலமடைந்துள்ளது. இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றனர். இடைதேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். வரும் 2026ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க., தரப்பில் தற்போது வடக்கு, தெற்கு, மத்திய என 3 மாவட்டங்களாக, ஒன்றியங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து செயல்படுத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டாக, வரும் தேர்தலை கருத்தில் கொண்டு பெண்கள் உரிமைத் தொகை, ஓய்வூதியம், அனைவருக்கும் ரேஷன் கார்டு, வீடு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களை சந்திக்க துவங்கி விட்டனர். அதே நேரத்தில் கட்சி ரீதியாக இன்னும் சில வாரங்களில் கூடுதலாக ஒன்றியம் பிரிக்கவும், நிர்வாகிகளை நியமிக்கவும் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் தலைமையில் வடக்கு, தெற்கு என 2 ஒன்றியங்கள் உள்ளதால் கட்சியில் பல்வேறு பணிகளை 2 ஒன்றிய செயலாளர்களும், அதில் உள்ள நிர்வாகிகள் மட்டுமே கவனிக்கும் போது பணி சுமை ஏற்படுகிறது. மேலும் தேர்தலின் போது பூத் வாரியாக பணி செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. வரும் 2026 தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.,விலும் கூடுதலாக ஒன்றியம் பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்தால் அவர்கள் பொறுப்புணர்வுடன் திறமையுடன் செயல்பட்டு எளிதாக கட்சி வெற்றி பெற உழைப்பார்கள். கூடுதல் மாவட்ட, ஒன்றிய செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா என் எதிர்பார்ப்பில் தங்களுக்கும் பொறுப்புகள் கிடைக்கும் என தொண்டர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை காத்திருக்கின்றனர்.