லாரியில் டி.வி.,க்கள் திருடிய வாலிபர் கைது
திருவெண்ணெய்நல்லுார்; லாரியில் டி.வி.,க்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், நன்னாட்டம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் யுவராஜ், 25; லாரி டிரைவர். சென்னையில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டு, திருவண்ணாமலை, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சியில் டெலிவரி செய்தார். மீதமுள்ள வாஷிங் மெஷின், டி.வி உள்ளிட்ட பொருட்களுடன் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். உளுந்துார்பேட்டை அருகே உள்ள ஏ.எக்குமாரமங்கலம் காப்புக்காடு அருகே சென்றபோது டீசல் இன்றி லாரி நின்றது. டிரைவர் யுவராஜ் அவ்வழியாக மொபட்டில் வந்த 2 வாலிபர்களை மடக்கி டீசல் வாங்கி வர உதவி கோரினார். ஒருவரை லாரிக்கு பாதுகாப்பாக நிற்க வைத்துவிட்டு, மற்றொரு வாலிபருடன் யுவராஜ் சென்று டீசல் வாங்கி வந்து லாரியை எடுத்து சென்றார். சிறிது துாரம் சென்றதும் சந்தேகத்தின்போரில், லாரியில் சோதனை செய்தபோது ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள 2 எல்.இ.டி., டி.வி., திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து யுவராஜ் உளுநதுார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தா வழக்குப்பதிந்து விசாரித்தார். டீசல் வாங்கி வர சென்றபோது, லாரிக்கு பாதுகாப்பாக நின்றிருந்த கணையார் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் ஏழுமலை, 28; என்பவரை பிடித்து விசாரித்தபோது, எல்.இ.டி., டி.வி., திருடியது தெரியவந்தது. ஏழுமலையை கைது செய்து டி.வி.க்களை பறிமுதல் செய்தனர்.