உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மின் தடை நேரத்தை மாற்ற வேண்டும்

மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மின் தடை நேரத்தை மாற்ற வேண்டும்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் யு.பி.எஸ்., பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையை தவிர்க்க மின் தடை நேரத்தை மாற்றி அமைக்க மின் வாரியம் முன் வர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் சக்கர குளத்தெரு, ரயில்வே பீடர் ரோடுகளில் மின் வாரிய அலுவலகங்கள் உள்ளன. இங்கு நகராட்சி பகுதி மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த அலுவலகங்களில் மின்சாரம் இல்லாத நேரங்களில் கம்ப்யூட்டர் இயக்குவதற்கு வசதியாக பல லட்ச ரூபாய் செலவில் யு.பி.எஸ்., அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யு.பி.எஸ்., பழுதால் மின் தடை நேரத்தில் கம்ப்யூட்டர்கள் இயங்குவதில்லை. மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதை தவிர்க்க மின் வாரியம் கையினால் ரசீது வழங்குவதாக அறிவித்தாலும் அதை முறையாக செய்வதில்லை. எனவே மின் தடை செய்யப்படும் நேரத்தை மாற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ஸ்ரீவி.,நகராட்சி பகுதியில் மின் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக மின் தடை செய்யப்படும் நேரத்தை காலை 6 முதல் 9 மணியாக மாற்றியது. மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் இம்மாதம் கடந்த ஒரு வாரமாக காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. மக்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. மின் வாரியத்தினர் மின் கட்டணத்தை செலுத்த மின் தடை நேரத்தை மாற்ற முன் வர வேண்டும்.

இது குறித்து விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறுகையில் ,'' கடந்த மாதம் காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் தடை நேரம் வந்ததால் மின் கட்டணம் செலுத்துவதற்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக மின் தடை நேரம் மாற்றப்பட்டது. இதை எல்லா மாதமும் பின் பற்ற முடியாது. இப்படி ஒரு பகுதிக்கு மட்டும் மாற்றினால் அனைத்து பகுதிக்கும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை