| ADDED : டிச 04, 2025 04:19 AM
ராஜபாளையம்: குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பு, பலமின்றி கரை உடைப்பு, ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள், போன்ற சிக்கல்களால் மேல இலுப்பங்குளம் கண்மாய் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். ராஜபாளையம் மேல இலுப்பங்குளம் கண்மாய்க்கு அய்யனார் கோயில் ஆற்று நீர், கருங்குளம் கண்மாய் நிறைந்து, செங்குளம் கண்மாயில் திறந்து விடப்படும் உபரி நீர் ஆதாரமாக இருப்பதால் முதல் மழைக்கு கண்மாய் நீர்வரத்து காணப்படும். இக் கண்மாய் 80 ஏக்கருக்கும் அதிகமாக நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் என பாசன பகுதிகளை கொண்டுள்ளது. நகர் பகுதி ஒட்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப் பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் பாசனத்திற்கான நீர் மாசடைவதுடன் கிணறுகளில் நிலத்தடி நீரும் பாதிப்படைகிறது. கண்மாய் கரையிலிருந்து பிளாஸ்டிக் குப்பை கட்டட, மாமிச கழிவுகளை கொட்டி செல்கின்றனர். நீர்ப்பிடிப்பில் நீரை நிறுத்தி வைக்கும் கலுங்கல்கள் பலகை இன்றி உடைப்பெடுத்துள்ளதால் கண்மாயில் நீர் தேக்க முடியவில்லை. ஊராட்சி ஒன்றியம் சார்பில் 125 மணல் மூட்டைகள் கொடுத்தும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது. விவசாயிகள் சார்பில் மணல் மூட்டைகளை வைத்து பாதுகாக்கின்றனர். இதேபோல் மறுபக்கம் உள்ள கலுங்கலிலும் அதிக நீர்வரத்தின் போது உடைந்ததால் அச்சங்குளம் கண்மாய்க்கும் வடிந்துவிட்டது. நீர் பிடிப்பும் குறைந்து விளைச்சல் காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விளைப் பொருட்களை கொண்டு வரவும், கண்மாய் கரைகள் வழியே அறுவடை இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கான பாதை முறைப்படுத்தாமல் உள்ளது. பிரச்சனை குறித்து கலெக்டர் வரை கோரிக்கை வைத்தும் முறையான பதில் இல்லை.கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றி நீர் பிடிப்பு ஆதாரங்களை மீட்க வேண்டும். பாதை வேண்டும் பாலகுரு, விவசாயி: தற்போது கண்மாய் கரையை ஒட்டி விவசாயப் பகுதிகளுக்கு செல்வதற்கும், விவசாய இடுபொருட்கள் கொண்டு செல்லவும், விளை பொருட்கள் வெளியே கொண்டு வரவும் தடை ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட்களாக மாறி வந்தாலும் சாகுபடியில் ஈடுபடுபவர்களுக்கு முறையான பாதை வழங்க வேண்டும். அடிக்கடி உடையும் கண்மாய் அய்யனார், பாசன சங்க தலைவர்: சமீப காலங்களில் கண்மாய் மூன்று முறை உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறி உள்ளது. ஒவ்வொரு முறையும் அதை நம்பிய விவசாயிகள் பாசனத்திற்கு போதுமான தண்ணீர் இன்றி பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். தற்போதும் கலுங்கல்கள் சீரமைக்காமல் உள்ளதால் கண்மாய் நீர் வெளியேறி வருகிறது. பாசனத்திற்கான மடைகளும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 45 நாள் பயிர்கள் உள்ள நிலையில் முழுவதும் தண்ணீர் தேய்க்க வழியில்லை. ஓடையில் நிரம்பும் கழிவுகள் ராதா பாண்டி, பாசன சங்க செயலாளர்: பிரதான கால்வாயில் இருந்து காண குளம் கண்மாய்க்கு செல்லும் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தண்ணீர் கண்மாய்க்கு செல்லும்போது இக்கழிவுகள் கண்மாயை அடைந்து பாசன பகுதிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதிகரிக்கும்போது தீயை வைத்து கடமையை முடிக்கின்றனர். கண்மாய்க்கு செல்லும் நீர் ஓடையில் குப்பைகுவிப்பதை தடுக்க வேண்டும்.