| ADDED : ஜூலை 26, 2024 12:11 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 10 முதல் ஜூலை 18 வரை 1 லட்சத்து 75 ஆயிரத்து 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இணை இயக்குநர் தியோபிலஸ் ரோஜர் தெரிவித்தார்.மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியாப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, திருச்சுழி நகர் பகுதிகள், சுற்றிய ஊரகப்பகுதிகளில் தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10ல் துவங்கப்பட்டது.இதில் ஜூலை 18 வரை விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகள் என மொத்தம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நோயினால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைதல், எருதுகளின் வேலைத்திறன் குறைதல், மாடுகளில் சினை பிடிப்பு தடை, இளங்கன்றுகளில் இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.