பேரிகார்டுகளை தட்டி செல்லும் வாகனங்கள் தொடருது விபத்து: பாலம் அமைப்பதே தீர்வு
விருதுநகர்: விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் பேரிகார்டுகளை தட்டி விட்டு செல்லும் வாகனங்களால் விபத்து தொடர்கிறது. பேரிகார்டுகள் வைப்பதால் இப்பகுதிக்கு தீர்வு இல்லை. பாலம் அமைப்பதே தீர்வாகும்.விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் மிக்க சந்திப்பாகவே மாறி வருகிறது. கலெக்டர் அலுவலக சந்திப்பை போன்று இல்லாமல் இப்பகுதி குறுக்காக ரோடு செல்கிறது. கிராஸ் செய்யும் இந்த பகுதி கலெக்டர் அலுவலக சந்திப்பு கிராஸிங் பகுதியை விட குறுகியதாக உள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றமே பேரிகார்டுகளை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று வரையில் நான்கு வழிச்சாலையில் தீராத தலைவலியாக பேரிகார்டுகள் உள்ளன. தற்போது புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் அதிகரித்து வரும் நெரிசலால் குறுக்கே கிராஸ் செய்ய நிற்போரும், நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்களும் போட்டி போட்டு முந்துகின்றன. ஒரு வாகனங்களை விடாமல் மற்றொரு வழித்தட வாகனங்கள் முந்துவதால் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பேரிகார்டை தட்டிவிட்டு செல்கின்றன. இதனால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இப்பகுதியில் பாலம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.நீண்ட கால கோரிக்கையான கலெக்டர் அலுவலக பாலம் பணிகள் தற்போது தான் துவங்கி உள்ளது. புல்லலக்கோட்டை சந்திப்பில் பாலம் கட்டுவதும் காலத்தின் கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில் மோசமான சூழலால் டூவீலர்களில் செல்லும் சாமனிய வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர்.