| ADDED : ஜூன் 26, 2024 07:36 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை அகற்றுவதில் பல ஆண்டுகளாக தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆன்மிக நகரான ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளுக்கு நாள் வெளியூர் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் வீடுகளின் எண்ணிக்கையும், வணிக நிறுவனங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் நகரின் வயல் பகுதிகளில் வீடுகள் கட்டுமான பணிகள் ஆண்டு தோறும் நடக்கிறது. இதனால் டூவீலர்கள், ஆட்டோக்கள் அதிகரித்து கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.இதனால் அரசு மருத்துவமனை முதல் ஆண்டாள் கோயில் வரையிலும், அரசு பஸ் டிப்போ முதல் ஆண்டாள் தியேட்டர் வரையிலும், பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள அனைத்து பஜார் வீதிகளிலும், தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டிய தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக அலட்சியமாக இருக்கின்றனர். அரசியல்வாதிகள் மூலம் நெருக்கடி இருப்பதாக கூறி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறுகின்றனர். போலீசாரிடம் கேட்டால், ஆக்கிரமிப்புகளை எடுப்பது தேசிய மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பணியாகும். நாங்கள் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மட்டுமே கொடுக்க முடியும் என்கின்றனர்.இந்நிலையில் பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள், கடைகளை காலியாக போட்டு விட்டு, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வரும் பஸ்களும், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் எளிதாக வர முடியாத நிலை உள்ளது.இவ்வாறு பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை பல ஆண்டுகளாக காணப்படுகிறது.எனவே, நகரின் அனைத்து பஜார் வீதிகளையும் கலெக்டர் ஜெயசீலன் நேரடியாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.