உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பல கோடி நிதி ஒதுக்கியும் சுகாதார கேட்டில் அருப்புக்கோட்டை

பல கோடி நிதி ஒதுக்கியும் சுகாதார கேட்டில் அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை நகராட்சியில் குப்பை அள்ள ஒரு ஆண்டிற்கு கோடிக்கணக்கான நிதி செலவழித்தும் அருப்புக்கோட்டை நகர் சுகாதார கேடாகவும், குப்பையை மறு சுழற்சி செய்ய பல கோடியில் வாங்கப்பட்ட உபகரணங்களும் வீணாக கிடக்கிறது.அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சி சுகாதார பிரிவின் மூலம் வார்டுகளில் சேரும் குப்பை அள்ளப்பட்டு நகரின் 6 பகுதிகளில் உள்ள மைக்ரோ கம்போஸ்ட் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு மக்கும், மக்காத குப்பை பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பை சுக்கிலநத்தம் ரோட்டில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தினமும் நகரிலிருந்து 32 டன் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.குப்பை கிடங்கில் மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 8 கோடி ரூபாய் நிதியில் குப்பையை மறு சுழற்சி செய்யும் உபகரணங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை. இதனால் குப்பை கிடங்கில் மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்த நிலையில் உள்ளது.மேலும் ஒரு ஆண்டிற்கு முன்பு 36 வார்டுகளிலும் குப்பை அள்ள தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் முறையாக குப்பையை அள்ளுவதில்லை. நகரில் எங்கு பார்த்தாலும் குப்பை குவியல் குவியலாக கிடக்கிறது. குப்பையை அள்ளுவதற்கு மாதம் ரூ. 40 லட்சம் வீதம் ஒரு ஆண்டிற்கு ரூ.4 .80 கோடி செலவழிக்கப்படுகிறது. நகரில் குப்பையை அள்ள நிரந்தர துாய்மை பணியாளர்கள் 78 பேர், ஒப்பந்த பணியாளர்கள் 180 பேர்கள் உள்ளனர். இவர்களை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரி ஒருவர் என உள்ளனர். இத்தனை பேர்கள் இருந்தும் அருப்புக்கோட்டை நகர் குப்பை நகரமாக காட்சியளிக்கிறது.குப்பையை அள்ள தனியாரிடத்தில் ஒப்பந்தம் போட்டதிலிருந்து நகரில் துாய்மை பணிகள் ஏனோதானோவென்று தான் நடக்கிறது. நகரை துாய்மையாக்க கோடிக்கணக்கான ரூபாய் நகராட்சியில் இருந்து செலவழித்தும் பயன் இல்லாத நிலையில் உள்ளது. பிரதான வாறுகால்கள், தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.நகராட்சி தலைவரும் இதை கண்டு கொள்ளவதில்லை. ஆய்வு செய்வதும் இல்லை. ஆனால் குப்பைக்கான பில் மட்டும் தவறாமல் பாஸ் ஆகிறது. மாவட்ட நிர்வாகம் தான் முழுமையான ஆய்வு செய்து அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரமான நகராட்சியாக மாற்ற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ