| ADDED : ஜூலை 16, 2024 11:20 PM
சிவகாசி,: 'மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,' என, முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறியுள்ளதாவது: 2022 ல் உயர்த்தப்பட்ட 4.30 சதவீதம் நிலை கட்டண உயர்வு, பேக் ஹவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மின் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 8 கட்டங்களாக பல்வேறு அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.அந்த போராட்டங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை வாரியம் செவி சாய்க்காமல் மின் கட்டணத்தை குறைக்காமல், தற்போது மீண்டும் 4.83 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு அளிக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பது வேதனையளிக்கிறது. சொத்து, தொழில், விற்பனை, வருமான வரி என உழைப்பின் பெரும்பகுதியை அரசிற்கு வரியாக செலுத்தி பங்களிப்பு அளித்து வரும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை வஞ்சிக்காமல், முதல்வர் கருணையோடு பரிசீலித்து உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.