கிடப்பில் காவிரி, வைகை, குண்டாறு கிருதுமால் நதி இணைப்பு திட்டம்
நரிக்குடி: காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகள் கிடப்பில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி வறட்சியான பகுதிகள். முழுக்க விவசாயம் சார்ந்த பகுதிகள். மழை பொழிவு இருந்தால் மட்டுமே விவசாயம் நடைபெறும். 10, 15 ஆண்டுகளாக சரி வர மழை இல்லை. விவசாயம் பாதிக்கப்படுவதால் இப்பகுதியில் நீர் ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தது. கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை ஒரு பகுதியாகவும், புதுக்கோட்டையிலிருந்து மானாமதுரை வரை 2வது பகுதியாகவும், மானாமதுரையிலிருந்து காரியாபட்டி பி.புதுப்பட்டி 3வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் 85 சதவீத பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மற்ற இரு பகுதிகளும் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளன. நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. அதன் பின் கால்வாய் வரக்கூடிய பகுதிகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்கிற உத்தரவை தொடர்ந்து, நிலங்களை விற்கவும் முடியாமல், வாங்கவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். நிலம் எடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் விரைவுபடுத்தாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த பருவமழைக்கு மழை நீர் வீணாக கடலில் கலந்தது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கிடப்பில் உள்ள இத்திட்டத்தை விரைவுபடுத்தி, நீர் வீணாவதை தடுக்க வேண்டும். நீரை சேமிக்கும் பட்சத்தில் இப்பகுதி விவசாயம் செழிப்படையும். கால்நடைகளை திறம்பட வளர்க்க முடியும். குடிநீர் பிரச்னை தீரும். தென்பகுதிகளான 7 மாவட்டங்கள் பயன்பெறும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் குடிநீர் பிரச்னை தீர்வதோடு இப்பகுதிகள் வளம் பெரும் என்பதால் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.