| ADDED : ஏப் 24, 2024 12:14 AM
அருப்புக்கோட்டை : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்துார் , வத்திராயிருப்பு, கோயில்களில் பெருமாள் கள்ளழகர் கோலத்தில் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துாரில் வையாளி சேவை நடந்தது. அருப்புக்கோட்டை அருகே சென்னல்குடி சீனிவாச பெருமாள் கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடந்தது. அழகர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, பொட்டில்பட்டி பேச்சியம்மன் கோயில் அருகில் உள்ள கௌசிகா ஆற்றங்கரையில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இங்கு 2 நாட்கள் தங்கி இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து விட்டு மீண்டும் சென்னல்குடி கோயிலுக்கு சென்று விடுவார். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். *வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.நேற்று காலை கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பட்டு அணிவிக்கப்பட்டது. பின்னர் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் கோயிலில் இருந்து வெளியே வந்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க பூக்களை தூவி பெருமாளை வரவேற்றனர். பின்னர் அர்ஜுனா நதியில் இறங்கிய அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் எதிர் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்த சபையினர் செய்திருந்தனர்.*சாத்துாரில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கினார்.சித்ரா பெளர்ணமி திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து கள்ளழகராக பெருமாள் குதிரை வாகனத்தில் வீற்றிருந்த சுவாமியை பெரிய கொல்லப்பட்டி பக்தர்கள் நான்கு ரத வீதி வழியாக வலம் வரச் செய்தனர். அப்போது பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வத்தல்,வெங்காயம், பருத்தி, உள்ளிட்ட தானியங்களை வீசி வழிப்பட்டனர். பின்னர் பகல் 11:35 மணிக்கு சுவாமி வைப்பாற்றில் எழுந்தருளினார். அங்குள்ள திருக்கண்ணில் வீற்றிருந்து தூப தீபம் நடந்தது. 1:00 மணிக்கு சுவாமி பெரிய கொல்லப்பட்டி கோயிலை சென்றடைந்தார். நேற்று இரவும் இன்று அங்கு நடைபெறும் சித்ரா பெளர்ணமி விழாவில் கலந்து கொண்டு வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு பெரிய கொல்லப்பட்டியில் கருட வாகனத்தில் கிளம்பி சாத்துார் கோயிலை வந்தடைவார்.* ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று நடந்தது.நேற்று காலை கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் இருவரும் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். காலை 9:05 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்க மன்னார் மாடவீதி, மேலரத வீதிகள் வழியாக ஆத்துக்கடை சந்திப்பு வந்தனர்அங்கு காலை 10:45 மணிக்கு ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அப்போது ஆண்டாளை, ரெங்க மன்னார் மூன்று முறை சுற்றிவரும் வையாளி சேவை நடந்தது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.