| ADDED : ஜூலை 02, 2024 06:35 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி நிலைக்குழுக்கள் பெயரளவில் கூட செயல்படாது முடங்கி கிடக்கின்றன.2022 நவம்பரில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடத்தி இதில் மாவட்ட ஊராட்சிக்கான 5 நிலைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.விவசாயம், உணவு பாதுகாப்பை கண்காணிக்க உணவு மேலாண்மைக்குழு, தொழில் மேம்பாடு, தொழிலாளர்கள் நலனை உறுதி செய்ய தொழில், தொழிலாளர் குழு, நீராதாரங்களை வளப்படுத்த பொதுப்பணிக்குழு, பள்ளிகளை மேம்படுத்த கல்விக்குழு, மது விற்பனையை தடுக்க, சுகாதாரத்தை மேம்படுத்த மதுவிலக்கு உள்ளடங்கல், மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு ஆகியவை அமைக்கப்பட்டு மாவட்ட கவுன்சிலர்கள் அதன் தலைவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.நிலையில் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தில் இக்குழுவின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து எந்த விவாதமும் இதுவரையில் நடக்கவில்லை. அதே நேரம் இந்த நிலைக்குழுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கும் போது, அந்த கூட்டங்களுக்கும் இதன் தலைவர்கள், உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை. இதனால் ஊரக செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படாத சூழல் உள்ளது.பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் பலமான அமைப்பாக உள்ள மாவட்ட ஊராட்சி நிர்வாகம், அதன் கவுன்சிலர்கள் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பொறுப்புகளுக்கான பதவியை முழுதும் பயன்படுத்தி ஆரோக்கிய விவாதங்களை கொண்டு செயலாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.