உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நகராட்சியில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கம்

சாத்துார் நகராட்சியில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கம்

சாத்துார் சாத்துார் நகராட்சியில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கம் அடைந்து வருகின்றன.நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் நகராட்சியில் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் ,இன்ஜினியர் ,நகரமைப்பு அலுவலர்,சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணிகளுக்கும் தனி அதிகாரிகள் இல்லாமல் கூடுதல் பொறுப்பாக அலுவலர்கள் கவனித்து வருவதால் நகராட்சியில் பணிகள் தேக்கம் அடைந்து வருகிறது.சிவகாசி மாநகராட்சி ஏ.இ. ரமேஷ் கூடுதல் பொறுப்பு இன்ஜினியராக இருந்து சாத்துார் நகராட்சியை கவனித்து வருகிறார். சுகாதார அலுவலர் பணியை கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலரும் நகரமைப்பு அலுவலர் பணியை விருதுநகர் நகராட்சி நகரமைப்பு அலுவலரும் கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகின்றனர்.இதனால் நகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை இனைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்ள உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாதநிலை உள்ளது. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டம் 2011ஆண்டு துவங்கியது தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்று வரை முறையாக அனைத்து தெருக்களுக்கும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் நகராட்சி பகுதியில் புதிய வீடுகள் கட்டுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் உடனடியாக கட்டட அனுமதி கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.நகராட்சிக்கெனதனி அலுவலர்களை நியமிப்பதன் மூலமே மக்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண முடியும். தற்போது அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால் பணிச்சுமைக்கு ஆளாவதுடன் மக்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.எனவே இனியும் காலம் தாழ்த்தாது மாவட்ட நிர்வாகம் சாத்துார் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ