| ADDED : மே 13, 2024 12:34 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட தெருக்கள் தற்போது வரை முடிவடையாமல் அதே நிலையில் உள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.ராஜபாளையம் நகராட்சி அம்ருத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்காக நகராட்சி பகுதி ரோடுகள், தெருக்கள், சந்துகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டன. துவங்கிய வேகத்தில் கொரோனா, தேர்தல் என பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தி மெயின் ரோடுகள் தெருக்களில் மட்டும் பணிகளை முடித்துள்ளனர்.ஆனால் தற்போது வரை 10 சதவீதத்திற்கும் அதிகமான சந்து பகுதிகளில் தோண்டப்பட்டது மேடு பள்ளங்களாகவே உள்ளன. இவற்றைக் கடக்கும் முதியோர், பெண்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அனைத்து சந்து பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது.இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தாலும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதால் ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களை கூறி வருகின்றனர்.ஏற்கனவே மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து உடல் உறுப்பு பாதிப்புகளை கண்டு வந்தும் தற்போது வரை பணிகள் தொடங்காமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் கவனம் எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.