சாத்துாரில் பூட்டிய வீட்டை குறி வைத்து திருடும் கும்பல் கண்காணிப்பை தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு
சாத்துார்: சாத்துாரில் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் வீட்டில் திருடி வரும் கும்பலை பிடிக்க போலீசார் இரவு ரோந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சாத்துார் பாரதி நகர், போக்குவரத்து நகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வெளியூருக்கு செல்வோரின் வீடுகளை கண்காணித்து மர்ம கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டி வருகிறது. பகல் நேரத்தில் பூட்டு தொங்கும் வீடுகளை கண்காணித்து இரவு நேரத்தில் திருடும் நபர்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நகரை ஒட்டி அமைந்துள்ள போக்குவரத்து நகர், கலைஞர் காலனி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகள் புறநகர் பகுதிகளாக அமைந்துள்ளன. பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் நடக்கிறது.தற்போது சாத்துார் நகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று புறநகர் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அமைத்து தெருவில் நடமாடுபவர்களை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் போலீஸ் ரோந்து பணியையும் தீவிரப்படுத்த வேண்டும்.தற்போது பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் தொடர்கதையாகி உள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிட போலீசார் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.