| ADDED : ஜூன் 10, 2024 06:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு, வத்திராயிருப்பு பிளவக்கல் அணை மலை அடிவார விவசாய பகுதிகளில் அடிக்கடி யானைகள் ஊடுருவி விளைபொருட்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் மான்கள் மற்றும் யானைகள் அதிகளவில் உள்ளது. இவைகள் அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.இதில் மாங்காய் சீசன் ஏற்படும் போதெல்லாம் யானைகள் ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில், காட்டழகர் கோயில், கான்சாபுரம் அத்தி கோயில், பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணை, கிழவன் கோயில் போன்ற மலை அடிவாரப் பகுதிகளுக்கு மாலை நேரங்களில் வந்து மா, வாழை, தென்னைகளை சேதப்படுத்தி செல்வது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.தற்போதும் கடந்த சில வாரங்களாக இத்தகைய மலையடிவார விவசாய நிலங்களுக்கு யானைகள் வந்து மாமரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் தரப்பில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், யானைகள் விளைபயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகவே நீடிக்கிறது.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மலையடிவார விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.