உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / * அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்... அவதி : ரூ.லட்சத்தில் அமைத்த ரோடுகள் சேதமாகுது

* அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்... அவதி : ரூ.லட்சத்தில் அமைத்த ரோடுகள் சேதமாகுது

காரியாபட்டி: ரூ.பல லட்சங்கள் செலவு செய்து புதுபிக்கப்படும் கிராமப்புற ரோடுகளில், அதிக பாரங்களை விதி மீறி ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சேதம் அடைந்து, காற்றில் துாசி பறப்பதுடன், குண்டும், குழியுமாகி, மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனை கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல், செம்மண், கிராவல் குவாரிகள் என ஏராளமாக இயங்கி வருகின்றன. கனரக லாரிகளில் 3 முதல் 12 யூனிட் வரை கனிமங்களை எடுத்துச் செல்கின்றனர். ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு, ஸ்பின்னிங், ஜின்னிங் மில்கள் உள்ளிட்ட ஆலைகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் விதிகளை மீறி அதிக பாரங்களை ஏற்றி செல்கின்றனர். பெரும்பாலான ஆலைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கிராமப்புற ரோடுகளை பயன்படுத்தியே அமைந்திருக்கும். கிராமப்புற ரோடுகள், சாதாரண வாகனங்களின் எடையை கணக்கில் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான ஆயுட்காலம் 15 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரர் செய்ய வேண்டும். அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களின் எடையை தாக்குப் பிடிக்க முடியாமல் ரோட்டில் விரிசல் ஏற்பட்டு, குண்டும் குழியுமாகி சேதம் அடைகிறது. இதனை உடனடியாக சரி செய்தால் அடுத்து ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும். ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்வது கிடையாது. மழை நேரங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் இருக்கும். கனரக வாகனங்கள் செல்லும்போது மேலும் பள்ளம் ஏற்பட்டு, அதிக அளவில் சேதம் ஏற்படுகின்றன. மற்ற வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாது. ரூ பல லட்சம் செலவில் போடப்பட்ட ரோடு குறுகிய காலத்தில் சேதம் அடைந்து நிதி வீணாகிறது. வெயில் காலத்தில் தூசி பறந்து கண்களை பதம் பார்க்கிறது. இதைத்தொடர்ந்து நான்கு வழி சாலைகளிலும் கனரக வாகனங்களில் விதி மீறி அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட எடை, மிதமான வேகம் என அரசு விதிகளை வாகன உரிமையாளர்கள் பின்பற்றுவது கிடையாது. அதிகாரிகளும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். ஆகவே ரோடுகளை சேதப்படுத்தாத வகையில் அரசு அனுமதித்த எடையுடன் பாரங்களை ஏற்றிச் செல்ல வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், கனிமவளத்துறை, வருவாய் துறை, போலீசார் அடிக்கடி ஆய்வு செய்து விதி மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ