| ADDED : ஏப் 11, 2024 06:30 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் உடலின் நீர்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் ' என்ற வெப்ப வாதம்' ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மருத்துவத்துறை இணை இயக்குநர் பாபுஜி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:மனித உடலில் சாதரணமாக 96 டிகிரி பாரன்ஹீட் இருக்க வேண்டும். உடல் 70 சதவிகித நீராலும், 1. 75 மேற்பரப்பு மீட்டர் தோலால் ஆனது. உடலில் இன்ட்ரா செல்லுலார் நீர், எக்ஸ்ட்ரா செல்லுலார் நீர் என்ற இரண்டு வகைகள் உள்ளது. இதில் எக்ஸ்ட்ரா செல்லுலார் நீர் குறைந்தால் வாய் வழியாக நீர் எடுத்துக்கொள்வதன் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் இன்ட்ரா செல்லுலார் நீர் குறைந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தான் சரிசெய்ய முடியும்.உடலில் நீர்சத்து குறையும் போது சிறுநீர் வெளியேறும் அளவும் குறைந்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக படியான நீர்சத்து தோல் மூலம் வெளியேறுகிறது. சோடியம் குளோரைடு, பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்களும் தோல் மூலம் வெளியேறுகிறது. உடலுக்கு தேவையான நீர்சத்து இல்லாத சமயத்தில் மயக்கம் ஏற்படுகிறது.இதை தான் ஹீட் ஸ்ட்ரோக் 'என்ற வெப்பவாதம் என கூறுகிறோம். இதை தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த பாதிப்பு பெரும்பாலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோரை பாதிக்கிறது.இதனால் வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் குடை, காலணி, வெளிர் நிற ஆடைகள், நீர், இளநீர், கரும்புச்சாறு, நீர்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தலை, கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வெளியே செல்ல வேண்டும். இதன் மூலம் தோல் வழியாக நீர்சத்து வெளியேறுவதை குறைக்க முடியும். வெயில் காலத்தில் காரின் உள்ளே அதிக வெப்பம் நிலவும் என்பதால் குழந்தைகள், வயது முதிர்ந்தோரை நீண்ட நேரம் அமர வைக்கக்கூடாது, என்றார்.