சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்
விருதுநகர் : விநாயகர் சதுர்த்தி, அதன் பின் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.செப். 7ல் விநாயகர் சதுர்த்தி, அதன் பின் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்கள், பல்வேறு அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் எஸ்.பி., கண்ணன் முன்னிலையில் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: விழா ஏற்பாட்டாளர்கள் விநாயகர் சிலைகள் நிறுவவும், ஊர்வலம் நடத்தவும் , சிவகாசி சப் கலெக்டர், சாத்துார், அருப்புக்கோட்டை, ஆர்.டி.ஓ.,க்கள் ஆகியோரிடமிருந்து உரிய அனுமதி பெற வேண்டும்.சிலை உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு சிலை செய்வதற்கான உரிமம் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி, நகர்புற நிர்வாகத்தினரிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ், தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) போன்ற பொருட்களால் சிலைகள் அமைக்க கூடாது.சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு, மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகள் நிறுவப்படும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக அமைப்பு, எளிதில் தீப்பற்றாத பொருட்களைக் கொண்டு (தகரம், சிமென்ட் அட்டை) அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.சிலைகள் அடி மட்டத்தில் இருந்து அதாவது மேடை, பீடம் உட்பட அதிகபட்சம் 10 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். மற்ற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, கல்வி சார்ந்த நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது.மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும், என்றார்.