மந்தகதியில் நடக்கும் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்த கதியில் நடக்கிறது.அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தினமும் இங்கு 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்வர். பஸ் ஸ்டாண்டின் பல பகுதிகள் சேதமடைந்ததை இடித்துவிட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதன்படி புதிய ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 2023, ஏப்ரல் மாதம் பணிகள் துவங்கியது. புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள், நவீன கழிப்பறைகள், பசுமை புல்வெளிகள், பயணிகளுக்கு இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழந்தைகள் விளையாட இடம், வங்கிகள், போலீஸ் அவுட் போஸ்ட்உட்பட வசதிகள் செய்யப்பட உள்ளது. ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும்.ஆனால் மந்தகதியில் பணிகள் நடப்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடியாத நிலையில் உள்ளது. கட்டட பணிகள் மட்டும் தான் நடந்து வருகிறது. அதன்பின், உள் கட்டமைப்பு வசதிகள் செய்ய சில மாதங்கள் ஆகும்.நகராட்சி அதிகாரிகள் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க அக்கறை காட்டுவதில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே பயணிகளின் வசதிக்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித வசதிகளும் இல்லை. மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் ஆகி விடுகிறது. விரைவில் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்க வேண்டும்.