| ADDED : ஜூன் 21, 2024 03:46 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்கிட கோரி மூட்டா சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.தமிழக அரசு கல்லூரி, பல்கலை ஆசிரியர்களுக்கான ஊதிய குழு பரிந்துரையை நிறைவேற்றும் வகையில் கல்லூரி, பல்கலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்திற்கான அரசாணை எண் 5, 2021ல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை, அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு நிலுவைத் தொகையோடு ஊதியமும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்று வரை அதற்கான ஊதியம் கூட வழங்கப்படவில்லை. ஒரு சில மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீதமுள்ள 6 மண்டலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய வழங்கப்படாமல் இருப்பதற்கான எந்த அடிப்படை காரணமும் தெரியவில்லை. நிதி பற்றாக்குறையும் இல்லை.இந்த நிதியாண்டில் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையோடு அனைத்து ஊதியமும் வழங்க தமிழக அரசு நிதி துறையால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆணை பிறப்பிக்கபடாமல் உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் 3 ஆண்டுகளாக உயர் கல்வித் துறை, கல்லூரி கல்வியியல் இயக்குனரையும் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. அதனால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.