சிவகாசி:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி, 26; சிவகாசியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதி கடையில் வேலை செய்த சிவகாசி, வம்பிழுத்தான் முக்கு பகுதியைச் சேர்ந்த நந்தினி குமாரியை, எட்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு நந்தினி குமாரியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும், நந்தினிகுமாரியும், கார்த்திக்பாண்டியும் அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். நந்தினி சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:20 மணியளவில் நந்தினியை அழைத்துச் செல்ல கார்த்திக்பாண்டி சூப்பர் மார்க்கெட் வந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன், 27, தனபாலமுருகன், 26, அவரது நண்பர் சிவா, 23, ஆகியோர் கார்த்திக் பாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரித்து பாலமுருகன், தனபாலமுருகன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது: நந்தினி எட்டு மாதங்களுக்கு முன் கார்த்திக் பாண்டியை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்து விருதுநகரில் குடியேறி விட்டார். இதனால் நந்தினியை திருமணம் செய்த கார்த்திக்பாண்டியிடம், 'விருதுநகரில் குடியேறிய சகோதரியை போலவே வெளியூர் சென்று குடியேறுங்கள்' என, பாலமுருகன் கூறியுள்ளார். அதை கார்த்திக்பாண்டி கேட்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் கார்த்திக்பாண்டியை சந்தித்த பாலமுருகன், வெளியூர் செல்லுமாறு கூறியதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் விரக்தியுற்ற பாலமுருகன், சகோதரர் தனபாலமுருகன், நண்பர் சிவா ஆகியோருடன் சேர்ந்து கார்த்திக் பாண்டியை கொலை செய்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.