உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசுக்கு வட மாநில ஆர்டர் இல்லை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கவலை

பட்டாசுக்கு வட மாநில ஆர்டர் இல்லை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கவலை

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற, 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில், நேரடியாக 3 லட்சம், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில், 95 சதவீத பட்டாசுகள் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன.

ஆர்டர் வரவில்லை

எந்தவித பிரச்னையும் இல்லாமல் பட்டாசு தொழில் நடந்து கொண்டிருந்த நிலையில், முதன்முறையாக 2015ல் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என தன்னார்வலர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2018ல் உச்ச நீதிமன்றம் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது; அதிக ஒலி எழுப்பும் சரவெடி தயாரிக்கக்கூடாது; பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, தீர்ப்பின் படியே இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதால், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தவோ, சரவெடி தயாரிக்கவோ முடியவில்லை. இதனால் 40 சதவீதம் வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மக்கள் விரும்பும் பட்டாசுகளை கொடுக்கவும் முடியவில்லை. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியாததால் மத்தாப்பு, சாட்டை, பூச்சட்டி சக்கரம் போன்ற பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுதுமே மக்கள்அந்த பட்டாசுகளை விரும்புகின்றனர்.சில மாநிலங்களில் அரசு பட்டாசுக்கு நேரக் கட்டுப்பாடு, தடை விதிப்பதால் சிவகாசியில் பட்டாசுக்கு ஆர்டர் வரவில்லை. கடந்த காலங்களில் இதே நேரத்தில் வட மாநிலங்களில் பெரும்பான்மையான வியாபாரம் முடிந்திருக்கும்.

வியாபாரிகள் கவலை

ஆனால், இந்த முறை அனுமதி உண்டா என்பது தெரியாத வட மாநில வியாபாரிகள் இதுவரையிலும் பட்டாசுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. இதனால் சிவகாசி பட்டாசு உரிமையாளர்கள், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.பட்டாசு ஏஜென்ட் ராஜேஷ் கூறுகையில், ''ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள், கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் இதுவரையில் பட்டாசுக்கு ஆர்டர் வரவில்லை. வெரைட்டி கிடைக்காததாலும், பட்டாசு கடைக்கு உரிமம் வழங்கப்படாததாலும் ஆர்டர் எடுக்கவில்லை. இதனால் பட்டாசு தேக்கத்திற்கு வாய்ப்பு ஏற்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !