உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதிகள் இல்லை; முத்துராமலிங்கபுரம் மக்கள் அவதி

ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதிகள் இல்லை; முத்துராமலிங்கபுரம் மக்கள் அவதி

சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியம் படந்தால் ஊராட்சி முத்துராமலிங்கபுரத்தில் ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதி இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.படந்தால் ஊராட்சி முத்துராமலிங்கபுரத்தில் வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கற்கள் பெயர்ந்து துார்ந்து போன நிலையில் காணப்படுகிறது. வாறுகால் சுத்தம் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் தெருக்களில் உள்ள கழிவுநீர் தேங்குவதோடு, குப்பை குவிந்து காணப்படுகின்றன. நகரில் ஓடும் மழை நீர் ஓடையில் குப்பை அதிக அளவில் கொட்டப்படுகின்றது. பாலிதீன் பைகளும் சானிட்டரி நாப்கின் போன்ற குப்பைகளும் கொட்டப்படுவதால் ஓடைக்கு அருகில் வீடுகளில் வசிப்பவர்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நகரில் உப்பு தண்ணீர் குழாய் செயல்படாத நிலையில் உள்ளது. மின் மோட்டார் பழுதாகி உள்ளதால் ஜேஜே திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடு கற்கள் பெயர்ந்து மண் ரோடாக மாறிவிட்டது. குறுக்குத் தெருக்களில் உள்ள சிமிண்ட் ரோட்டின் கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.

சுகாதாரக்கேடு

காளியம்மாள், குடும்பத் தலைவி: குப்பை வண்டி வீட்டிற்கு தினம் வந்தாலும் பொதுமக்கள் அவர்களிடம் குப்பையை தராமல் ஓடையில் கொட்டி விடுகின்றனர். இதனால் ஓடையில் கழிவுநீர் ெசல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

தெருவிளக்கு தேவை

செல்வி, குடும்பத் தலைவி: நகரில் தெருவிளக்குகள் மிக குறைவாக உள்ளது.இரவு நேரத்தில் நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஓடையில் இருந்து இரவு நேரத்தில் பாம்புகள் வெளியேறி வருகின்றன. கையில் விளக்குடன் நடமாட வேண்டியுள்ளது. உப்புத் தண்ணீர் குழாய் பழுதாகி உள்ளது. சரி செய்ய வேண்டும்.

கொசுக்கடியால் அவதி

மாடசாமி, குடும்பத் தலைவர்: வாறுகால் சுத்தம் செய்ய மாதம் ஒருமுறைதான் ஆட்கள் வருகின்றனர். வாறுகாலும் இடிந்து துார்ந்து போய்விட்டது. கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும். பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

ராமலட்சுமி, தலைவர், படந்தால் ஊராட்சி: முத்துராமலிங்கபுரத்தில் வாறுகால் கட்டும் பணி நடந்து வருகிறது. குறுக்குத் தெருக்களில் சாக்கடை சீரமைக்கப்படும். ரோடு போட திட்ட மதிப்பீடு செய்யப்படும். மக்கள் தேவை குறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ