மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு துவக்கம் தமிழ் தேர்வில் 420 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் டூ பொதுத்தேர்வு துவங்கியது. தமிழ் தேர்வில் 420 பேர் ஆப்சென்ட் ஆகினர்.2024--25 ஆண்டுக்கான பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு மார்ச் 4 முதல் 25 வரை நடக்கிறது. இதற்காக மாணவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் வாழ்த்து மடல் வெளியிட்டார். மாவட்டத்தில் 224 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 98 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர்.10 ஆயிரத்து 363 மாணவர்களும், 11 ஆயிரத்து 861 மாணவிகளும் என 22 ஆயிரத்து 224 பள்ளி மாணவர்கள் தேர்வெழுத இருந்த நிலையில் மாணவர்களில் 248 பேர், மாணவிகளில் 172 பேர் என 420 பேர் ஆப்சென்ட் ஆகினர். 10 ஆயிரத்து 115 மாணவர்கள், 11 ஆயிரத்து 689 மாணவிகள் என 21 ஆயிரத்து 804 பேர் தேர்வெழுதினர். தனித்தேர்வர்கள் 140 பேரில் 20 பேர் ஆப்சென்ட் ஆகினர். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 45 மையங்கள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள் என 98 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 5 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 21 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நடக்கும் அனைத்து தேர்வு மையங்களில் 98 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 98 துறை அலுவலர்கள், 1927 அறைக் கண்காணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 137 பேர் தேர்வெழுதினர். இவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு 7 பறக்கும்படை குழுவில் 28 உறுப்பினர்கள், தேர்வு மையங்களில் 166 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கண்காணித்தனர். கலெக்டர் ஜெயசீலன், சி.இ.ஓ., மதன்குமார், சப் கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.