| ADDED : ஜூன் 22, 2024 01:55 AM
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ரூ.79 லட்சம் கையாடல் செய்த ஒப்பந்த பணியாளரான மகள் ரேவதி, ஊராட்சி செயலாளரான தாய் தெய்வானை மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டிற்கான பயனாளிகளை தேர்ந்தெடுத்து, விடுவிப்பு தொகை வழங்குவது 2023 மே 28 முதல் அனுப்பப்பட்டு வந்தது. இந்த தொகை முதலில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) அலைபேசி எண்ணிற்கு ஓ.டி.பி., பெறப்பட்டு பின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஓ.டி.பி., பெறப்பட்டு பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஓ.டி.பி., பெறப்பட்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பயனாளிகளுக்கு தொகை வழங்கப்படும்.இது தொடர்பாக2024 மே 6ல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம்மூலம் பெறப்பட்ட மின் அஞ்சல் செய்தியில் மூன்று நபர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் தொழில்நுட்ப கோளாறால் இரு தடவை செலுத்தப்பட்டுள்ளது. அந்த தொகையை வசூல் செய்யகோரப்பட்டது. மே 7 ல் கூடுதல் பொறுப்பு வகித்த அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம் என்பவரிடம் தகவல் சொல்லி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வசூல் செய்ய கூறினார். மதியம் 12:30 மணிக்கு ரூ.1 லட்சம் பணத்துடன் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்துள்ளார். குறுகிய நேரத்தில் பணம் வந்த விபரம் பற்றி கேட்ட போது ரேவதி கொடுத்ததாக கூறினார்.ரேவதி 2020 முதல் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின்கீழ் தற்காலிக கணினி உதவியாளராக அவுட்சோர்சிங் மூலம் பணிபுரிந்து வந்தார். இவரது தாய் தெய்வானை சடையம்பட்டி ஊராட்சி செயலராக பணிபுரிகிறார். மே 18ல் ரேவதியிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியவர் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்று சென்றவர் தற்போது வரை பணிக்கு வரவில்லை. சந்தேகம் வந்ததால் 2023 ஆகஸ்ட் முதல் பிரதமர் வீடு கட்டும் திட்ட தொகையை சரிபார்க்கும் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 76 பயனாளிகளின் பெயர்களை பயன்படுத்தி ரேவதி, தாய் தெய்வானையின் ஆலோசனை படி அவரது மகன், உறவினர்கள் மனோகர், ராம்கிருஷ்ணன் ஆகியோரின் வங்கி கணக்கில் வரவு வைத்து ரூ.79 லட்சத்து 63 ஆயிரத்து 505 வரை மோசடி செய்தது தெரிந்தது. தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு ஓ.டி.பி., வராத அளவிற்கு ரேவதியும், தெய்வானையும் சேர்ந்து அரசு பணத்தை கையாடல் செய்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனின் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.