உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொடர் சோதனை குறைந்ததால் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

தொடர் சோதனை குறைந்ததால் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு சோதனை குறைந்திருப்பதால் ஊரகப்பகுதிகளில் நடக்கும் கடத்தல் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து கடத்தலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியப்பட்டி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துாரை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேவைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் தொடர்ந்து செயல்படுகின்றன.ரேஷன் கடைகளில் இருந்து அரிசியை வாங்கும் நுகர்வோர்களில் பலர் உணவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. மாறாக வீட்டில் இட்லி, தோசை மாவுக்கும், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துகின்றனர்.இதில் ரேஷன் அரிசியை வீடுகளுக்கே சென்று புரோக்கர்கள் ஒரு கிலோவிற்கு ரூ. 5 கொடுத்து சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மொத்தமாக வாங்கி அந்தந்த வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள், வாகனத்தில் வரும் போது எடுத்துக்கொள்கிறோம் என கூறி செல்கின்றனர்.அதன் பின்பு வாகனங்களில் வந்து வீடுகளில் வைக்கப்பட்ட அரிசிகளை பிளாஸ்டிக் மூடைகளாக்கி மொத்தமாக வெளி மாவட்டங்கள், கேரளாவிற்கு கடத்தி விற்பனை செய்கின்றனர். இந்த கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.ஆனால் கடந்த இரு மாதமாக போலீசாரின் சோதனை குறைந்ததால் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து உள்ளது. கால்நடை வியாபாரிகள் போர்வையில் வந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்டத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை