பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்கள் அலட்சியத்தில் டிராபிக் போலீசார்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்வதை டிராபிக் போலீசாரும் கண்டு கொள்வது இல்லை.அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில் படிக்க, சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மாணவர்கள் பஸ்களில் வந்து செல்கின்றனர். பள்ளி நேரத்தில் செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் இல்லை. இதனால் நேரத்திற்கு செல்ல கூட்டமாக வரும் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர்.சில பஸ்களில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும் கூட படிக்கட்டில் தொங்கி செல்வதை தான் மாணவர்கள் விரும்புகின்றனர். அருப்புக்கோட்டை ரோடுகள் ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ளன. இதில் குதித்து கொண்டே பஸ்கள் செல்வதால், படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது.முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் இருந்தாலும் இதை கண்டு கொள்வது இல்லை. பள்ளி நிர்வாகமும் வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பஸ் கண்டக்டர்கள், டிரைவர்களிடம் படிக்கட்டுகளில் மாணவர் தொங்கி செல்வதை அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்.