| ADDED : ஜூன் 17, 2024 12:11 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் இரவு நேரங்களில் நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டெப்போ உள்ளது. இங்கிருந்து 72 க்கும் மேற்பட்ட பஸ்கள் 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள், மதுரை, விருதுநகர், கமுதி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்கிறது.திருச்சுழி, நரிக்குடி, பந்தல்குடி உட்பட பல ஊர்களிலிருந்து அருப்புக்கோட்டைக்கு இரவில் வரும் பஸ்கள் டவுன் பகுதியில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் இருந்தாலும் நிற்காமல் சென்று விடுகிறது. இந்த பஸ் நிறுத்தங்களில் ஏறும் பயணிகள் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்று அங்கிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. அரசு பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்று விட்டு பின்னர் டிப்போவிற்கு செல்ல வேண்டும். ஆனால் தெற்கு தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் பஸ்கள் டெப்போவிற்கு சென்று விடுகிறது. இரவு நேரங்களில் காத்திருந்தும் பஸ் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். டிப்போவிற்கு வேகமாக செல்வதற்காக அரசு பஸ்கள் நகரில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இரவு நேரங்களில் நிற்பதில்லை. மாவட்ட போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.