உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செண்பகத்தோப்பு செல்லும் விவசாயிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்

செண்பகத்தோப்பு செல்லும் விவசாயிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்

சிவகாசி, : ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகத்தோப்பு செல்லும் விவசாயிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என சிவகாசியில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

நாகு, மம்சாபுரம்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் இடையன்குளம் கண்மாய் பாசன வாய்க்கால் குறித்த தகவல் பொதுப்பணித்துறை வரைபடத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் கண்மாயில் கழிவு நீர் கலப்பதாலும், கால்வாய் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.சப் கலெக்டர்: இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜேந்திரன், புதுக்கோட்டை: புதுக்கோட்டை, செவலுார் கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த நெற்பயிரை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சப் கலெக்டர்: நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அம்மையப்பன், பிள்ளையார்குளம்: விவசாயம் , மண்பாண்ட தொழிலுக்காக கண்மாய்களில் மண் எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மண் கடத்தலை தடுக்கும் வகையில் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றவர்கள் விவரங்களை அந்தந்த வி.ஏ.ஓ.,, தாசில்தார் அலுவலக அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும்.மேலும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும், ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகத்தோப்பு செல்லும் விவசாயிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து சப் கலெக்டர் பேசுகையில், கூட்டம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே அனைத்து துறை அதிகாரிகளும் வந்து விட வேண்டும். விவசாயிகளை காக்க வைக்க கூடாது. விவசாயிகள் கூட்டத்திற்கு எந்த அதிகாரிகள் வரவேண்டும் என அரசாணையில் உள்ளதோ அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும். கீழ்நிலை அதிகாரிகளை கூட்டத்திற்கு அனுப்பினால் அவர்களால் எவ்வாறு பதிலளிக்க முடியும்.இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதிலை அடுத்த கூட்டத்தில் கட்டாயம் அளிக்க வேண்டும். ஆறு மாதமாக மனு அளித்தும் பதில் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வை தேட முயற்சிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார் அகஸ்தீஸ்வரன், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ