கட்டி ஆறு மாதமாகியும் திறக்காத ரேஷன் கடை
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் இடிந்த கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடியில் 450 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படுகின்றது. கட்டடம் சேதமடைந்த நிலையில் ரூ. 13.16 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இக்கட்டடம் கட்டப்பட்டு ஆறு மாதம் ஆகியும் இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை.தற்போது ரேஷன் கடை செயல்படும் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் கட்டடத்தில் உள்ளே இறங்குவதால் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்கள் வீணாகின்றது. தவிர கூரை சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ரேஷன் கடை ஊழியர் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக புதிய ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.