உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதை கண்காணிப்பதில் திணறல் விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் நுழையும் அபாயம் 

கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதை கண்காணிப்பதில் திணறல் விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் நுழையும் அபாயம் 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்களில் வண்டல் மண் அள்ளுவதை ஓவர்சீயர்கள், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் முழுவீச்சில் கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது. விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள் நுழைகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில் 283 கண்மாய்களில் விவசாய, மண்பாண்ட பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய, நீர்வள ஆதாரத்துறை கண்மாய்கள் உள்ளன. இதில் ஒன்றிய கண்மாய்களில் ஓவர்சீயர்களும், நீர்வள ஆதாரத்துறை கண்மாய்களில் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் கண்காணிப்பு செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் பற்றாக்குறை உள்ளதால் ஒருவரே 3 முதல் 5 கண்மாய்களை பார்க்க வேண்டி உள்ளது.இதனால் கண்மாய்களை முழு நேரம் கண்காணிக்க முடிவதில்லை. இதை பயன்படுத்தி விவசாயிகள் போர்வையில் அனுமதி சீட்டு பெற்ற அரசியல் வாதிகள் சிலரால், ஆழமாக அள்ளி கொள்ளையடிக்க வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து கண்மாய்களிலும் கனிமவளத்துறை ஆய்வு அவசியமாகிறது. எவ்வளவு ஆழம் அள்ளப்பட்டுள்ளது, உண்மையில் விவசாய, மண்பாண்ட பயன்பாட்டிற்கு தான் எடுத்து செல்கின்றனரா என தெரியவில்லை.இதற்கான அனுமதி முன்பு கலெக்டர் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தாசில்தார்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தாசில்தார்கள் வாயிலாக பணிகளை செய்யும் போது அதிகளவில் மண்ணை அகற்றினால், நீர்நிலைகளின் கரைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீர்வளத்துறை நிர்ணயம் செய்து மார்க்கிங் செய்து தரும் பகுதியில் மட்டுமே மண்ணை எடுப்பதற்கு அனுமதி வழங்க தாசில்தார்களுக்கு உத்தரவிட்டுள்ளது.வெறும் 3 அடிக்கு மட்டுமே மண் அள்ளப்பட வேண்டும். ஆனால் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் அள்ளுவது தான் இதில் உள்ள பிரச்னை. இவ்வாறு அள்ளும் பலர் அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவே உள்ளனர். தற்போது ஓவர்சீயர்கள், உதவி பொறியாளர்கள் பற்றாக்குறையால் கண்காணிப்பு பணியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் விவசாயிகள் போர்வையில் அரசியல்வாதிகள், அவர்களுக்கு தெரிந்தவர்களும் மண்ணை அள்ளுகின்றனர். சிலர் விவசாயிகள் என்று கூறி மண் அள்ளி வெளியில் பணத்திற்காக விற்கின்றனர். அனுமதி வழங்கப்பட்டவர்கள் எடுக்கும் வண்டல் மண் அந்தந்த பயன்பாட்டிற்கு தான் செல்கிறதா என்பதை வருவாயத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில், அனுமதிக்கப்பட்ட அளவில் தான் எடுத்துள்ளனரா என நீர்வளத்துறையும், கனிமவளத்துறையும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே கண்காணிப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் ஊழியர் பற்றாக்குறையை காரணம் காட்டி தப்பிக்காமல் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ