உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை தீவிரமாக நடந்து வரும் மேம்பால பணிகள்

திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை தீவிரமாக நடந்து வரும் மேம்பால பணிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் முடிந்துள்ளது எனவும், தற்போது மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2025 ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், சிவகிரி ,வாசுதேவ நல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி ,செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகிறது.இதனால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இந்த வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, பல மாதங்களாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும்பணி கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான அளவிற்கு ரோடுகள் அகலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணன் கோவிலில் இருந்து வலையப்பட்டி, பாட்டக்குளம்,மீனாட்சிபுரம், அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாபுரம், அத்திகுளம் செங்குளம், அயன் நாச்சியார் கோவில், பிள்ளையார் குளம், எஸ். ராமலிங்கபுரம் வழியாக முதுகுடி வரை புதிய ரோடு அமைக்கும் பணிகளும், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது பூவாணி, மீனாட்சிபுரம் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு, பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.திட்ட இயக்குனர் வேல்ராஜ் கூறுகையில்,'' 2025 மார்ச் 31க்குள் பணிகள் முடிவடைந்து ஏப்ரல் மாதம் முதல் நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது வரை 55 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறதும், அனைத்து பணிகளும் 2025 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ