| ADDED : ஜூன் 23, 2024 03:29 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வெளியேறும் காட்டமான நச்சுபுகை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு சுவாச கோளாற்றை ஏற்படுத்துகிறது.அருப்புக்கோட்டை சுக்கில நத்தம் ரோட்டில் நகராட்சியின் குப்பை கிடங்கு 20க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. தினமும் 30 டன்னுக்கு குறையாத குப்பைகள் குப்பை கிடங்கு செல்கிறது.மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை மக்கும் , மக்காத குப்பையாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு இதன்படி குப்பைகளை மறுசுழற்சி முறையில் உரமாகவும் மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கேக்குகளாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டது.அதன்படி மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் நிதியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கலன்கள், இதற்கான இயந்திரங்கள், கட்டடங்கள் தனி ரோடு என அமைக்கப்பட்டன. எதையும் பிரிக்க முடியாத குப்பைகளை உரமாக மாற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.இவை அனைத்தும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், குப்பைகளை எரித்தால் புகைகளால் புகையால் மாசு மாசு ஏற்படும் என்பதாலும் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.ஆனால் நகராட்சி குப்பை கிடங்கில் தினமும் குப்பைகளை தீ வைத்து கொளுத்துகின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை காற்றில் பறந்து சுற்றியுள்ள 3 க்கும் மேற்பட்ட கிராம மக்களை மூச்சு திணறலுக்கு உள்ளாக்குகிறது. கண்களில் எரிச்சல் ஏற்படுவதாகவும், தினமும் புகை தீ வைத்து எரிப்பது தொடர் கதையாக உள்ளது என மக்கள் புகார் கூறுகின்றனர்.சுற்றுச் சூழல் மாசு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி வீணாகி விட்டது. உபகரணங்கள் பயன்படுத்தாமல் உள்ளது. கட்டடங்கள் பாழடைந்து பயன்பாடின்றி உள்ளது. நிதியை கடமைக்கு செலவழித்து நகராட்சியினர் வீணடித்து உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தால் மட்டும் இயந்திரங்கள் இயங்குகிறது.