ராஜபாளையம்: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடு பணிகள் நடைபெறவில்லை, ஊரணியில் சமூக விரோத செயல்கள், நாய்கள் தொல்லை என மக்கள் தீர்வினை எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டில் 3 மெயின் தெருக்களுடன் 12 தெருக்கள் அமைந்துள்ளன.மாரியம்மன் கோயில் அடுத்து தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இப்பகுதியில் 4 தெருக்கள் மேடு பள்ளங்களுடன் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்கலை சந்திக்கின்றனர்.குடியிருப்பு அருகே உள்ள மயானத்தை ஒட்டி குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நுழைவுப் பகுதியில் செயல்படும் நுண் உரக்கிடங்கு துர்நாற்றம் வீசுகிறது. அதிகரித்துள்ள நாய்களால் குழந்தைகள் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக வர முடியவில்லை.ஊரணி பணிகள் தொடங்கி பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளனர். விடுபட்ட தெருக்கள்
சரவணன், குடியிருப்பாளர்: கிருஷ்ணசாமி தெரு, மாடசாமி தெரு, சங்கர் ராஜா தெரு உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கு குடிநீர் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்டு புதிய ரோடு பணிகள் தொடங்காமல் வைத்துள்ளனர். இதனால் மேடு பள்ளங்களில் வாகனங்கள் சென்று பாதிப்பு ஏற்படுவதோடு வயோதிகர்கள் விழுந்து தடுமாறுகின்றனர். பாராக மாறிய ஊரணி
முருகேசன், குடியிருப்பாளர்: ரூ.1 கோடி வரை செலவிட்டு நகரில் சுகாதாரமாக வைத்துள்ள ஊரணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. பகலில் திறந்தவெளி பார் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தட்டிக்கேட்டால் சமுதாயப் பிரச்சினையாக மாற்றுகின்றனர். சுற்றிலும் வேலி அமைத்தும் பூட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்யவில்லை. குடியி ருப்புகளி ல் துர்நாற்றம்
அஜந்தா, குடியிருப்பாளர்: குடியிருப்பு நுழைவு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை நுண் உரக்கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் மூச்சை அடைக்கும் வகையில் பாதிப்பு குறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கழிவுகள் தேக்கத்தின் போது இதன் பாதிப்பு அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் தொடக்கம் முதல் இடத்தை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். நாய்கள் பெருக்கம்
லட்சுமணன், குடியிருப்பாளர்: சுற்றிக் கண்மாய்கள் அமைந்துள்ளதால் பராமரிப்பற்ற நாய்கள் பெருகி உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நாய்களை கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் கிடப்பில் உள்ளது. கூட்டமாக திரிவதுடன் இரவு நேரங்களில் ஊளையிட்டபடியும் தனியாக வருபவர்களை விரட்டுகிறது. பாரபட்சம் பார்க்கிறாங்க
ராதா, கவுன்சிலர்: விடுபட்ட சாலை பணிகளின் கோரிக்கையில் நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் பார்க்கின்றனர். ஊரணி பணியில் ஒப்பந்ததாரர் குறித்து பலமுறை புகார் அளித்தும் பணிகள் முடிக்க நடவடிக்கை இல்லை. ரேஷன் கடை தனியாக பிரிப்பது என கோரிக்கை வைத்து நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.