சிவகாசியில் ஆள்மாறாட்டத்தில் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கு மேலும் 5 பேர் கைது
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகாசி அனுப்பன்குளத்தில் பழனிசாமி, சுப்பையா ஆகியோரது பெயரில் உள்ள 2 ஏக்கர் 59 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அனுப்பன்குளம் பேராப்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் வாங்கி பத்திரபதிவு செய்வதற்காக சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.ஆனால் பழனிசாமி பெயரில் ஆவண தாக்கல் செய்தவரின் உண்மையான பெயர் சிவக்குமார் என்பதும், சுப்பையா பெயரில் ஆவண தாக்கல் செய்தவரின் உண்மையான பெயர் கருப்பசாமி என்பதும் தெரிந்தது. இவர்களுக்கும் நிலத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதும், ஆள்மாறாட்டம் செய்தது கைரேகைகளை ஆதார் எண் உடன் ஒப்பிட்டு சரி பார்த்த போது உறுதியானது.இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து போலி ஆதார் ஆவணங்களை தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற சிவகாசியைச் சேர்ந்த ஆனந்தராஜ், சிவக்குமார், கருப்பசாமி, செல்வமணி, மகாராஜன் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் சிவகாசியைச் சேர்ந்த உத்தண்ட காளை 40, லட்சம் 40, செங்கோல் ராஜ் 56, ராஜசேகரன் 40, பாண்டீஸ்வரன் 39, ஆகியோர் நேற்று போலீசார் கைது செய்தனர்.