திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு பள்ளி கழிப்பறை
திருச்சுழி: திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டப்பட்டு 10 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.திருச்சுழி அருகே மேல பரளச்சி அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதில், மேலையூர், பரளச்சி, வாகைகுளம், கணக்கி, நல்லாங்குளம் உட்பட கிராமங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவிகளுக்கு தனியாக 2 கழிப்பறை உள்ளது.ஆனால், மாணவர்களுக்கு 1 கழிப்பறை தான் உள்ளது. இதனால், மாணவர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி என்.எல்.சி., நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், 2023 ல், மாணவர்கள் நலன் கருதி 2 கழிப்பறைகள் கட்டி தந்தது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது.இதுகுறித்து, திருச்சுழி இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வம் : மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டது. பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளேன். கழிப்பறையை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.