| ADDED : பிப் 08, 2024 06:26 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஓடையை மறைத்து கட்டடங்கள் கட்டியுள்ளதை நகராட்சி நகர அமைப்பு பிரிவு கண்டும் காணாமல் உள்ளது.அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி சாலையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. ரோட்டில் இரு புறங்களிலும் மழை நீர் வரத்து ஓடை உள்ளது. செம்பட்டி, தொட்டியாங்குளம் கிராமங்களில் மழை காலங்களில் வரும் உபரி நீர் கல்லூரி ரோட்டில் உள்ள ஓடைகள் வழியாக செங்கிட்டான் ஊருணி, முத்துமாரியம்மன் தெப்பம் மற்றும் கண்மாய்களுக்கு செல்லும்.காலப் போக்கில் ஓடை பராமரிப்பு செய்யாமல் விட்டதால், சிறிது சிறிதாக ஓடையை ஒட்டி கட்டடங்கள் கட்டுவதற்காக ஓடையை அழித்து விட்டனர். கல்லூரி முன்பு உள்ள ஓடை பகுதி மேவப்பட்டு கட்டுமான பணிகள் நடக்கிறது. ஓடை இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண்ணை போட்டு சமன் செய்து விட்டனர்.இவை அனைத்தும் தெரிந்தும் கண்டும் காணாமல் நகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளனர். இந்த பிரிவு செயல்படுகிறதா என்ற கேள்வி எழும் வகையில் இதன் செயல்பாடு உள்ளது.நகரின் பல பகுதிகளில் உச்சபட்ச ஆக்கிரமிப்பு, ரோடுகளில் இடைஞ்சலாக கட்டுமான பொருட்கள் என பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கையை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.வாகினி, நகராட்சி நகரமைப்பு அதிகாரி : எஸ்.பி.கே., கல்லூரி ரோட்டில் ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது எனக்கு தெரியாது. நான் இப்போது தான் வந்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.