சிவகாசியில் குடிநீர் தொட்டி கட்டி இரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசியில் காமராஜர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் அம்மன் கோவில் பட்டி தென்பாகம், வடக்கு தெரு உள்ளிட்ட பகுதி களுக்கு முழுமையாக போய் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலை அருகே இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அம்மன் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் தற்போது வரையிலும் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். எனவே இத்தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.