சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அவசியம்
சாத்துார்: சாத்துாரில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்துார் நகராட்சி அண்ணா பவளவிழா பேருந்து நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.தற்போது பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லை. இதன் காரணமாக திருநெல்வேலி நாகர்கோவில் துாத்துக்குடி கோவில்பட்டி என தென்பகுதிக்கு செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வாசலில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன.பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன் பஸ்கள் மட்டுமே செல்கிறது .ரூட் பஸ்கள் வந்து செல்வது கிடையாது.மதுரை ,கோயம்புத்தூர், திருப்பூர் ,சேலம், திருச்சி உள்ளிட்ட வடபகுதிக்கு செல்லும் பஸ்கள் சாத்துார் வெம்பக்கோட்டை ரோட்டில் மதுரை பஸ் ஸ்டாப்பில் நின்று செல்கிறது. இதேபோன்று நான்கு வழிச்சாலை சந்திப்பில் பைபாஸ் ரைடர் மற்றும் அதிவிரைவு ,தனியார் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.இதன் காரணமாக மெயின் ரோட்டிலும் நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் அடுத்தடுத்து நிறுத்தப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.சாத்துார் பகுதி மக்கள் நீண்டகாலமாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் வெம்பக்கோட்டை ரோட்டில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது.தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால் இந்தப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை ரோட்டில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.