தெற்காற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி அருகே ஓடும் தெற்காற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றிலிருந்து பிரிந்து கிளை நதியாக தெற்கு ஆறு காரியாபட்டி வழியாக பி.புதுப்பட்டி வரை சென்று மீண்டும் குண்டாற்றுடன் இணைகிறது. இடைப்பட்ட துாரத்தில் ஏராளமான கண்மாய்களுக்கு நீர் வரத்துக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. தெற்காற்றில் கிடந்த மணல்கள் எடுக்கப்பட்டதால் கட்டாந்தரையாக உள்ளது. இதில் தற்போது சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவ்வப்போது பெய்யும் மழைநீர், வரத்து ஓடை வழியாக தெற்காற்றில் பாய்கிறது. ஆங்காங்கே உள்ள பள்ளங்கள், சீமைக் கருவேல மரங்களால் தண்ணீர் பாய்ந்து ஓட சிரமம் ஏற்பட்டு, தடைபடுவதால் பல்வேறு கண்மாய்களுக்கு செல்வது பாதிக்கப்பட்டு வருகிறது.அது மட்டுமல்ல, காட்டுப்பன்றிகள் பதுங்கும் இடமாக இருந்து வருகிறது. விவசாயப் பணிகளுக்கு செல்லும் பெண்கள் அச்சுறுத்தல் காரணமாக செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழையால் குண்டாற்றில் தண்ணீர் வருகிறது.கிளை நதியான தெற்காற்றிலும் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கும் சீமைக் கருவேல மரங்கள் அப்புறப்படுத்தியும், பள்ளங்களை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.