உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசுத்துறை பெயர்களை பயன்படுத்தி ஸ்ரீவி.,யில் பால்கோவா கடை போர்டுகள்

அரசுத்துறை பெயர்களை பயன்படுத்தி ஸ்ரீவி.,யில் பால்கோவா கடை போர்டுகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழக அரசின் முத்திரை சின்னம், ஆவின் பெயர், கூட்டுறவுத்துறை சின்னம் கொண்ட போர்டுகள், லேபில்கள் பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரில் ரத வீதிகளிலும், ஆண்டாள் கோயில் பகுதிகளிலும் ஏராளமான பால்கோவா கடைகள் உள்ளது. இங்கு தமிழக அரசின் முத்திரை சின்னம், ஆவின் பெயர், கூட்டுறவுத்துறை சின்னம், அரசு பால்பண்ணை என்ற வாசகம் போன்றவற்றை பயன்படுத்தி போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆவின், நகராட்சி, கூட்டுறவு துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் பால்கோவா கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பாதுகாப்புத் துறையில் வாங்கிய லைசென்ஸ் பெயருக்கு பதிலாக அரசின் பல்வேறு துறை பெயர்களையும், சின்னங்களையும் பயன்படுத்தி போர்டுகளும், பால்கோவா பாக்கெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் குழுவினர் அறிவுறுத்தினர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாரியப்பன் கூறியதாவது, ஸ்ரீவில்லிபுத்துாரில் தனியார் பால்கோவா உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பால் பண்ணை, தமிழ்நாடு அரசு, ஆவின் போன்ற பெயர்களை பயன்படுத்தி பால்கோவா விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் பால்கோவா விற்பனை கடைகளில் ஆய்வு செய்தோம். அப்போது விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. என்ன பெயரில் லைசென்ஸ் வாங்கியுள்ளார்களோ அந்த பெயரில் தான் போர்டுகள் வைக்க வேண்டும். பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். இதனை மீறி அரசின் பெயரை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். எனவே, போர்டுகளையும், லேபிள்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ