| ADDED : மார் 10, 2024 04:52 AM
மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் சில மாதங்களாக அடுத்தடுத்த திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நகரப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.ஒரு சில செயல்படாமல் உள்ளன. இந்நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நகராட்சி பகுதிகளை ஒட்டி உள்ள வளர்ந்து வரும் ஊராட்சி பகுதிகளில் உள்ள புறநகர்களை குறி வைக்கின்றனர். புதிதாக வீடு கட்டுவோர் நகரின் இடப்பற்றாக்குறை காரணமாக அதை யொட்டி உள்ள ஊராட்சி பகுதியில் தான் வீடு கட்டுகின்றனர்.உதாரணமாக விருதுநகர் நகராட்சியை சுற்றிலும் சூலக்கரை மாடர்ன் நகர், முல்லை நகர், லெட்சுமி நகர், காவேரி நகர், என்.ஜி.ஓ., காலனிகள், ஆர்.எஸ்., நகர் பகுதிகளில் குடியிருப்புகள் பெருகி விட்டன. போலீசாரின் எல்லையும் பெரிதாகி பணிச்சுமையும் அதிகரித்துள்ளதால் எல்லா இடங்களிலும் முழு நேர ரோந்து சாத்தியமற்றது. 10ல் ஒருவர் மட்டுமே வெளியூர் செல்லும் போது போலீசில் தகவல் தெரிவித்து விட்டு செல்கின்றனர். பலர் தெரிவிப்பதே இல்லை.தகவல் தெரிவிக்கும் வீடுகளில் மட்டும் போலீசார் நள்ளிரவில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் குடியிருப்பு சங்கங்களை ஊக்குவித்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க உத்வேகம் அளிக்கின்றனர்.இருப்பினும் போலீஸ் தரப்பு சார்பில் குறைந்த பட்சம் நகர எல்லைப்பகுதிகளிலாவது கண்காணிப்பு கேமராக்கள் வைப்பது கட்டாயமாகி உள்ளது. தொலைதுாரம் செல்வோர் வரை கண்காணிக்கும் அதிநவீன கேமராக்களை போலீசாரால் தான் கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும். போலீசாரின் கட்டுப்பாட்டில் கேமரா இருந்தால் தான் அசம்பாவிதங்கள் நடந்தாலும் அதற்கான தடயங்களை அழிக்க முடியாது. குடியிருப்போர் சங்கங்கள் வைப்பதை மர்மநபர்கள் அறிந்து கொண்டு அந்த வீடுகளிலும் சூறையாடி செல்லவும் வாய்ப்புள்ளது.ஆகவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் குற்ற சம்பவங்களில் துப்பு துலக்க முடியாத நிலையை தவிர்க்க வளர்ந்து வரும் பகுதிகளில் குடியிருப்போர் பங்களிப்புடன்கேமரா, தங்கள் பங்களிப்பில் நகர் எல்லைப்பகுதியில்அதிநவீன கேமராக்கள் பொருத்துவதுடன், வெளியூர் செல்வோர் ஸ்டேஷனில் தகவல் தெரிவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.