| ADDED : ஆக 04, 2024 06:23 AM
மாவட்டத்தில் வளர்ச்சிக்கு ரோடு வசதி என்பது அத்தியாவசியமானது. ரோடு இருந்தால் வணிக போக்குவரத்து சாத்தியமாகும். மத்திய அரசின் நான்கு வழிச்சாலை திட்டத்தால் இன்றைய போக்குவரத்து பயணம் எவ்வளவு விரைவாகவும், அத்தியாவசியமானதாகவும் மாறி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் விருதுநகர் போன்ற முன்னேற துடிக்கும் மாவட்டங்களை மேம்படுத்த சுற்றுவட்ட சாலைகள் தேவைப்படுகிறது.குறிப்பாக நகர்ப்பகுதிகளை ஒட்டி உள்ள ஊரக பகுதிகள் மேலும் வளர்வதற்கு அங்கு புதிதாக அமையும் தொழிற்சாலைகள் உதவிகரமாக இருக்கும். அங்கிருந்து பொருட்களை வேறு மாவட்டங்களுக்கு எளிதில் போக்குவரத்து நெருக்கடி இன்றி கொண்டு செல்ல சுற்று சாலைகள் உதவும். மாவட்டத்தில் தொழில் நகரமான சிவகாசிக்கு விரைவில் சுற்று சாலை அமைய உள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் பணிகள் எதுவும் துவங்கவில்லை.இதே போல் விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கும் சுற்று சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.விருதுநகரை பிரித்து நான்கு வழிச்சாலை சென்றாலும், உட்புற பகுதிகளின் இடநெருக்கடியை குறைத்து காரியாபட்டி மல்லாங்கிணர் ரோடு, அருப்புக்கோட்டை கல்குறிச்சி ரோட்டின் வழியாக கலெக்டர் அலுவலகம் உள்ள சூலக்கரை வருவதற்கு சுற்றுசாலை அவசியமாகிறது. இது அமையும் பட்சத்தில் விருதுநகர் விரிவடைவதுடன் தொழில் வளமும் அதிகரிக்கும்.மெயின் பஜார், மதுரை ரோடு போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வணிக போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சூழல் மாறி நகர்ப்பகுதியில் நெரிசல் குறையும்.ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து காந்தி சிலை வரை போக்குவரத்து நெரிசல் எப்போதும் அதிகமாகவே இருக்கும். 3 கி.மீ., கடப்பதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை தாமதமாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கோதைநாச்சியார் புரத்தில் இருந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனை வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைத்தால் நகர்ப்பகுதி நெரிசல் குறைக்கப்படும்.இதனால் சுற்றி உள்ள ஊரகப்பகுதிகளும் வளர்ச்சி அடையும்.அதே போல் வத்திராயிருப்பில் 3 முதல் மூன்றரை மீட்டர் அகலத்திற்கு தான் ரோடு உள்ளது. இங்கிருந்து பல்கலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி, கூமாப்பட்டி செல்வதற்கும் வத்திராயிருப்பு மெயின் ரோட்டை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.இதுதவிர அறிவித்தது போல் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் சுற்றுவட்ட சாலை அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும். வணிக மேம்பாட்டை உறுதிப்படுத்தும் சுற்றுவட்ட சாலைகளை விருதுநகர் போன்ற தொழில் மாவட்டத்தில் விரைந்து கொண்டு வந்தால் தொழில் வளர்ச்சி மேம்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும்.