| ADDED : ஜன 26, 2024 05:03 AM
விருதுநகர்: மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உள்குத்தகைக்கு விடுவது கண்டறியப்பட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும், என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். உரிமதாரர்கள் தங்களது பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடக் கூடாது.ஆய்வின் போது கண்டறியப்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். ஆலை உரிமதாரர்கள், குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை விதிக்கப்படும்.இதே போல் நேற்று சாத்துார் சின்ன கொல்லபட்டியில் கலாராணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் அறையில், சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த அஜித் 23 சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது காலை 6:00 மணிக்கு வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.சட்ட விரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் வெடிகள், பட்டாசுகள், கருந்திரி தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும், இடத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெடிவிபத்தில்லா விருதுநகரை உருவாக்குவதில், சட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், என்றார்.