மேடு பள்ளமான ரயில்வே ஸ்டேஷன் ரோடால் அவதியுறும் பயணிகள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு கிடங்காகவும், மேடும் பள்ளமுமாக இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் இருந்தும், ரயில்வே பீடர் ரோட்டில் இருந்தும் மக்கள் டூவீலர் ஆட்டோக்களில் ஸ்டேஷன் வருகின்றனர். மதுரை ரோட்டில் இருந்து 1 கி.மீ., தூரமுள்ள ஸ்டேஷன் செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு செய்யாமல் குண்டும் குழியுமாகவும் கிடங்காகவும் உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ., தூரம் உள்ள ரோட்டை ஆட்டோக்கள், மினி பஸ்ஸில் கடக்க 5 நிமிடங்கள் ஆகும். ரோடு மோசமான நிலையில் இருப்பதால் தற்போது இந்த ரோட்டில் செல்ல 20 நிமிடங்கள் ஆகிறது. இதனால் பயணிகள் சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் தவற விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆட்டோக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வர தயங்குகின்றன. வெளியூரிலிருந்து ரயிலில் வரும் மக்கள் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு செல்ல படாத பாடுபட வேண்டி உள்ளது. ரோட்டை புதியதாக அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ரயில்வே நிர்வாகம் புதியதாக ரோட்டை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அருப்புக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.