மேலும் செய்திகள்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
13-Mar-2025
சிவகாசி ; சிவகாசியில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுமான பணி கூடுதல் நிதி ஒதுக்கியும் மந்தமாக நடைபெறுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புதிய கட்டடத்தை ஆய்வு செய்த மேயர் சங்கீதா ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தார். சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்ட பின்னர் எதிர்கால மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பஸ் ஸ்டாண்டு அருகே சாத்துார் ரோட்டில் 1.75 ஏக்கர் நிலத்தில் 47 ஆயிரம் சதுர அடி புதிய அலுவலகம் கட்டுவதற்கு 2023ல் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது. புதிய அலுவலகத்தில் கீழ் தளத்தில் 15,970 சதுர அடி பரப்பளவில் பார்க்கிங், தரை தளத்தில் 15,920 சதுர அடி பரப்பில் மேயர், கமிஷனர், துணை மேயர் அறைகள், வரி வசூல் மையம், ஆய்வு கூட்ட அரங்கு, முதல் தளத்தில் 14,638 சதுர அடியில் பொறியியல் பிரிவு, 100 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கு, சுகாதாரம், நகரமைப்பு என பல்வேறு துறைகளுக்கு தனித்தனி அறைகளுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024 பிப்.ல் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி கேட்கப்பட்டு, ரூ.3.70 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.முதலில் துரிதமாக நடந்த பணிகள் அதன்பின் மந்தமாகி பல மாதங்களாக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூகவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி விட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணிகளை மேயர் சங்கீதா, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டதாக கட்டுமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மேயர் சங்கீதா கூறுகையில்: புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணியை ஆய்வு செய்தபோது, ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்காமல், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புதிய டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
13-Mar-2025